முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடல்மொழிக் களஞ்சியம் 3

அத்தியாயம்-3

கையெடுத்துக் கும்பிடுதல், கைக்குலுக்குதல், மற்றும் உள்ளங்கை சைகைகள்.


 சின்ன வயதில் அடிக்கடி கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு சிறுவயது நண்பர்கள் அடர்ந்த காட்டுவழியே பயணம் செய்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு கரடி வருவதை பார்த்து உடல்நடுங்கி நின்றனர். இருவரில் ஒருவனுக்கு மரம் ஏறத்தெரியும். அதனால் சட்டென்று அருகிலிருந்த அடர்ந்த மரத்திலேறி தப்பித்துக்கொள்கிறான். அடுத்தவன் என்ன செய்வது என்று முழித்தபோது, “அசையாமல் மல்லாந்து படுத்திருந்து, மூச்சுக்கூட விடாமல் இருந்தால், செத்துப்போய் விட்டான் போலுள்ளது, என நினைத்து கரடி போய்விடும்”, என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்குவர, அதேபோல் செய்கிறான். கரடியும் அவன் அருகே வந்து, குனிந்து சற்று மோந்து பார்த்துவிட்டு, பேசாமல் சென்று விடுகிறது. மரத்தில் இருந்தவன் கீழே இறங்கிவந்து, “கரடி உன்னிடம் ஏதோ சொன்னதே, என்னது அது?”, என்று கேட்கிறான். “ஆபத்துக்காலத்தில் உதவாதவனை நண்பனாக கொள்ளாதே என கரடி சொன்னது”, என இவனும் பதில் கூறுகிறான்.




 நாய்கள், பூனைகள், புலிகள் என எல்லா விலங்குகளும் தமக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றன. சண்டைக்கு உயிர்,உணவு போன்ற பெரிய காரணங்கள் இருந்தால் சண்டை ஆக்ரோஷமாக இருக்கும். சண்டையின் முடிவில் தோற்றுப்போன விலங்கிற்கு ஏற்படும் காயங்களுக்கு நிகராக வெற்றிப்பெறும் விலங்கிற்கும் அடிபடும். அதேசமயம் அற்பத்தனமான விஷயங்களுக்குக்கூட கண்முதலான உறுப்புகளை இழப்பது அனாவசியம். இதற்காக அவை தமக்குள்ளேயே ஒரு ஏற்பாட்டை வகுத்துக்கொண்டுள்ளன, அல்லது இயற்கையே அந்த விதியை அவற்றுக்கு கற்று தந்திருக்கிறது. 



இப்போது இரண்டு தெரு நாய்களை பார்ப்போம். ஒன்று வலியது, மற்றொன்று பொடியது. ஏதோவொரு சச்சரவில் முன்னது பின்னதை பார்த்து உறுமுகிறது. உடனே பொடிய நாய் கழுத்தை குறுக்கிக்கொண்டு, தலையை தொங்கப்போட்டு கொள்கிறது. வாலை காலுக்குள் நுழைத்துக்கொள்கிறது.உடலை பக்கவாட்டில் வளைத்து தன்னைத்தானே குறுக்கிக்கொள்கிறது. ஆனாலும் வலியதற்கு திருப்தி இல்லை. அது இன்னும் பெரிதாக வாயைத் திறந்து பற்களை காட்டியபடி மேலும் நகருகிறது. உடனே பொடியது சட்டென மல்லாந்து படுத்து தன் உயிர் பகுதியான தொண்டையை காட்டுகிறது. நீ தான் பெரியவன், பலசாலி, உன் சக்தியை ஒப்புக்கொள்கிறேன், அதை அறிவிக்கும் விதமாக என் உயிர்நாடியான உள்ளங்கழுத்தை உன் கூரியபற்களின் முன் சரணாகதியாக சமர்பிக்கிறேன். இதுதான் மேற்சொல்லப்பட்ட நிலையின் பொருள். உடனே வலியநாய் கழுத்தை முகரும், சரியுன் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, உன்னை விடுவிக்கிறேன் பிழைத்துப்போ, என்பதுபோல் போய்விடும்.

அத்தியாயத்தின் துவக்கத்தில் சொல்லப்பட்ட கதையில் வரும் கரடி உண்மையில் அவனுடைய மூச்சை கவனிக்கவில்லை, மாறாக அவனுடைய தொண்டையை மட்டுமே முகர்கிறது. இதே விஷயத்தை ஒரு பயங்கரமான பரிசோதனையின் மூலம் விளக்கிக் காட்டியிருக்கிறார் ஒரு மேல் நாட்டு அறிஞர், வயிறார உணவிடப்பட்ட கொடூரமான ஆண் ஓநாயொன்று, அவிழ்த்துவிடப்பட, அதனெதிரே அந்த அறிஞர், மல்லாக்க படுத்துக்கொண்டார். கடும் ஆவேசத்துடன் ஓடிவந்த அந்த விலங்கு ஆராய்ச்சியாளரின் கழுத்தை சில விநாடிகள்வரை மோப்பம் பிடித்துவிட்டு, ஒன்றும் செய்யாமல் திரும்பி போய்விட்டது. 



நானும்கூட இந்த பரிசோதனையை செய்துப் பார்த்தேன், என் வீட்டுக்குட்டிப்பூனையின் எதிரே; ஆனால் என்னை பார்த்து பயந்து விட்டிருந்த பூனை கிட்டக்கூட வராமல் ஓடிவிட்டது. அடச்சே உடல்மொழியை பற்றி தெரியாத விலங்கு என்று சலித்துக்கொண்டேன். 


 சற்றேறக்குறைய மனிதனும் விலங்குதான்; ஆனால் நான் உண்மையானவன், வெளிப்படையானவன், என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை, என்று சொல்ல அவன் தொண்டையை மட்டும் நிமிர்த்தி காட்டுவதில்லை, மாறாக அத்துடன் சேர்த்து உள்ளங்கைகளையும் காண்பிக்கிறான்.ஆதிகால குகைமனிதன் மற்றொருவனை சந்திக்கும்போது, என்னிடம் ஆயுதமேதுமில்லை என்று கைகளை பிரித்துக் காட்டுவதிலிருந்து இந்த சைகை தோன்றியிருக்கலாம். ஒருவன் தன் திறந்த மனதை உருவகமாக காட்ட இதயத்தின் மீது வலது உள்ளங்கையை வைக்கிறான், அல்லது மற்றொரு உள்ளங்கையோடு சேர்த்து சத்தியம் செய்கிறான். அதுவும் இல்லையென்றால், ஏதோ கற்பனையான பொருள் காற்றில் மிதப்பதுபோல் அதன்மீது உள்ளங்கையை வைக்கிறான். இதற்கு நேர்மை, உண்மை, பணிவு, வெளிப்படை என்று பல்வேறு அர்த்தங்களை கூறிக்கொண்டே போகலாம். 



 அடிப்படையில் உள்ளங்கை சைகையில் இரண்டுவிதமான நிலைகள் உள்ளன.ஒருநிலை கையானது கவிழ்ந்திருப்பது, மற்றொன்று மேற்பக்கம் பார்ப்பது. இவைகளை தவிர்த்து வேறொரு நிலையொன்று உள்ளது. அது கையானது கவிழ்ந்திருக்க சுட்டுவிரல் நீட்டியிருப்பது. ஒருவர் உண்மையை கூறுகிறாரா? அல்லது பொய் சொல்கின்றாரா? என்பதை வெட்டாவெளிச்சமாக காண அவரின் உள்ளங்கைகளின் நிலையை வைத்தே கண்டுகொள்ளலாம். இது ஒரு முக்கியமான வழிமுறையாகும், ஆனால் இது மட்டுமே வழிமுறையாகாது, ஆனால் இதுவும் ஒரு வழிமுறையாகும். 




உதாரணமாக ஒருவர் தன்னிடமுள்ள விஷயங்களை மறைக்காமல் பேசுகிறார் எனில், அவர் தன்னுடைய உள்ளங்கைகளை வெளிப்படையாக காண்பித்து கொள்வார், கண்களை நேராக பார்ப்பார், தடுமாறாமல் பேசுவார், இவையெல்லாம் பொதுவான விஷயங்களாகும். பொய் பேசுபவர், உள்ளங்கைகளை மறைத்துக்கொள்வார், கண்களை நேர்க்கொண்டு பார்க்கமாட்டார், பேச்சில் தடுமாற்றம் இருக்கும், இதுவும் பொதுவான விஷயங்களாகும். 



இதேபோல் ஒரு குழந்தையானது பொய் சொல்லும்போது தன்னிரு கைகளையும் பின்புறத்தில் மறைத்துக் கொள்கின்றது. அல்லது வாயை தன்னிரு கைகளாலும் பொத்திக் கொள்கின்றது.

 



 இப்போது கைகள் காட்டும் சைககளின் அர்த்தங்களை பார்க்கலாம். உள்ளங்கை அண்ணாந்து வானம் பார்க்கும் நிலை. பொதுவாக இந்தநிலை உண்மையை, நேர்மையை, மறைப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையை காட்டுவது. நீங்கள் ஒருவரிடம் ஒருவேலையை செய்யச் சொல்லி கேட்கின்றீர்கள், அல்லது ஆணையிடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் அவரிடம் கடுஞ்சொல்லால் வேலையிட்டபொழுதிலும், மேற்கண்ட நிலையில் உங்கள் கையை வைத்துக்கொண்டு இருந்தால், அப்போது அந்த வேலையாள் மனதில் வன்மம் இருக்காது. இயல்பாகவே அந்த வேலையை செய்து முடிப்பான். ஆனால் இரண்டாவது நிலையில் இருக்கும் அந்த ஒற்றைவிரலை காட்டிக்கொண்டு, அதேசமயம் எவ்வளவுதான் இன்சொல்லை கூறினாலும், அவன் மனதில் வெறுப்புணர்ச்சி தோன்றும். இதை நானும் கண்ணாரக்கண்டேன்.
கைக்குலுக்குதல் ஒரு முன்னூறு வருடத்திற்கு முன்னர் மேல்நாட்டினரால் நம்முடைய தமிழக பூமியில் மற்றும் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. சாதாரணமாக உடல்மொழியிலும் மற்ற உலக நடவடிக்கைகளிலும், சீதோஷண நிலையே மனிதர்களிடத்தில் அதிக தாக்கத்தை உண்டு செய்கின்றது. அதில் கைக்குலுக்குதலும் ஒன்று; பொதுவாக இந்த நிலை குளிரான இடங்களில் கடைப்பிடிப்பதாகும். கட்டிப்பிடிப்பதும், கைக்குலுக்குவதும் தம்முடைய உடல் சீதோஷண நிலையை தக்கவைக்கவே இந்த நிலைகளுக்கு காரணம். 



ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கும்பிடுவதொன்றே பல்லாயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். காரணம் என்னவென்றால் இந்தியா குறிப்பாக தமிழ்நாடு ஆனது வெப்பமான பிரதேசமாகும். இங்கே பெரும்பாலோனருக்கு வியர்வை வழிந்துக்கொண்டே இருக்கும் ஆதலால், கைக்குலுக்குதல் சமாச்சாரம் ஒத்துவராது; பிற்பாடு வந்த இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி வைத்தனர்.  



பொதுவாகவே இக்காலத்தில் கைக்குலுக்கும் முறை உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கைகளை குலுக்கும்போது ஐந்திலிருந்து ஏழுமுறை குலுக்குவதாக கணித்திருக்கின்றனர். இந்த கைக்குலுக்குதலில் மொத்தம் மூன்றுவிதமான நிலைகள் உள்ளன என்று தெரிய வருகின்றது, 



இந்த மூன்றுவித நிலைகளிலும்  கைக்குலுக்கும் போது அதற்கேயுரிய பாதிப்புகள் நம்மை வந்து அடைகின்றன. 



 நிலை 1 

சாதாரணமாக இருவர் சந்தித்து கைகுலுக்கும் போது இருவரும் சமமாக இருந்தால் இப்படி கைகுலுக்கி கொள்வார்கள். அதாவது இருவரும் கைகளை நேராக வைத்தே கைக்குலுக்குவர்.
 நிலை 2 

கைக்குலுக்கும் நபர்களில் ஒருவர் ஆளுமை எண்ணம் படைத்து இருந்தால் அவர் உள்ளங்கையை கீழ்புறமாக வைத்தே கைக்குலுக்குவார். அப்போது எதிராளி தன்னையறியாமலே அவரிடம் சிறுத்துப் போவார். இதை பொதுவாக இந்த நிலையை அரசியல்வாதிகளிடம் பார்க்கலாம்.





 இந்த நிலைக்கு உதாரணமாக ஹிட்லர் அவர்களை கூறலாம். அவர் பொதுக்கூட்டங்களிலோ அல்லது இராணுவ அதிகாரிகளிடமோ பேசும்பொழுது, வலதுகையை நீட்டி உள்ளங்கை கீழ்புறமாக பார்க்கும்படி பிரமாணம் இடுவது வழக்கமாகும். 



நிலை 3 

தாழ்வு மனப்பான்மை கொண்டவர் எவருமே இந்த நிலையை கொள்வார். அதாவது கைக்குலுக்கும் போது எதிராளிக்கு உள்ளங்கையை மேற்புறமாக வைத்தே கைக்குலுக்குவார். 

 தொடரும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடல்மொழிக் களஞ்சியம்-அத்தியாயம்-2 மனிதன் எனும் விலங்கு--அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.

  உடல்மொழிக் களஞ்சியம்       அத்தியாயம்-2   மனிதன் எனும் விலங்கு-- அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.     யூரிலோகஸ் அறைக்குள்ளே இருந்த மாலுமிகள் யாவரும் வெவ்வேறு வகையான மிருகமாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்தான். உட்கொண்டிருந்த மதுவின் தாக்கம் சகல கட்டுப்பாடுகளையும் நீக்கி விட்டிருக்க ஒவ்வொரு ஆணின் தன்மைக்கேற்ப அங்கே ஒவ்வொரு வகையான மிருகம் தோன்றியது. ஒரு மாலுமி சர்ஸியின் மென்மையான தேகத்தை தொட்டதும், துடிக்கின்ற இரையை கரடுமுரடாக பற்றியிழுத்து,வான்பார்த்து ஊளையிடும் ஓநாயாக தோற்றமளித்தான். மற்றொருவன் பசுமீது பளுவுடன் பாயும் காளையாக மாறிவிட்டான். இன்னொருவன் சேற்றில் புரளும் முள்ளம்பன்றியாக காட்சியளித்தான். இவற்றோடு நீள்கொம்பு ஆடு, செம்மறியாடு, கீரிச்சிடும் குரங்கு, மான், கலப்பின நாய் இவை யாவற்றையும் அவன் ஒரே இடத்தில் கண்டான். --ஹோமரின் பள்ளியறை ஓடிஸி.     தெரு நாய்களை பார்த்திருப்பீர்கள். அது அவ்வபோது தானிருக்கும் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் ஓடும். இடையிடையே வண்டிகள் தெரு கம்பங்களை மோப்பம் பிடிக்கும்...

உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம்-3 தொடர்ச்சி.

 உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம் 3 தொடர்ச்சி. கைக்குலுக்குதலும் கையெடுத்துக் கும்பிடுதலும். ஆளுமைப்படுத்துவது, ஆளுகைக்கு கீழ்படிவது மற்றும் சரிசமமாக கைக்குலுக்குவது என்ற பொதுவான நிலைகளை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேற்கண்ட படத்தில் காணப்படும் பெண் ஆளுகைக்கு கீழ்படிவது என்ற நிலையில் அந்த நாயோடு கைக்குலுக்கின்றார் என்றால், அந்த நாய்க்கு தன் கையென்ற காலை திருப்ப முடியாது என்ற நிலையே காரணம்! பொதுவாக புகைப்படங்களில் பார்ப்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள், அவை அந்தந்த கணத்திற்கு நிகழுபவை!!!                                            மூன்றுவிதமான                                                     கைக்குலுக்குகள் இப்போது இந்த மூன்றுவித கைக்குலுக்குகளை பற்றி பார்ப்போம். சிலர் கைக்குலுக்கும் போது உள்ளங்கையை கீழ்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு க...