உடல்மொழி அல்லது உடலசைவு மொழி என்பது, ஒரு மனிதனாவன் அவன் வாழ்கின்ற சூழல், இடம், பண்பாடு, கல்வி, குணம், மனோபாவத்திற்கு ஏற்ப, பேச்சு மொழியின் ஏற்ற இறக்கம், தொனி, முக உணர்ச்சிகள், கைகால் அசைவுகள் மூலம் தன் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவது ஆகும். இவ்விடத்தில் பண்பாடு, நாகரிகம் என்பதெல்லாம் அவன் காலங்காலமாக வாழ நேர்கின்ற பிரதேசத்தின் சூழலுக்கேற்ப இயற்கையாக இயல்பாக உண்டாகும் பழக்கவழக்கங்களும், அப்பழக்க வழக்கங்களை சடங்குத்தனமாக இறுக்கி அவற்றின் மீது பூசப்படும் புனிதங்களும் ஆகும்.
உதாரணமாக சென்னை நகர கடற்கரை மீனவனை கவனிப்போம்.அவன் வழிவழியாக கட்டுமரம் [இப்போது மோட்டார் படகு] படகினில் சென்று மீன் பிடிக்கிறான். அச்சமயத்தில் பரந்து விரிந்த கடற்பரப்பில் சக மீனவனோடு தொடர்பு கொள்ள முயலும் போது அவன் பயன்படுத்தும் வார்த்தைகள் சொற்பமே; அவற்றையும் அடிக்கின்ற காற்றின் வேகத்திற்கு ஏற்ப, நீட்டி இழுத்து, பேச்சு மொழியால் எழுத முடியாத எண்ணற்ற ஒலிகளையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதோடு தொடர்பு சாதனமாக பயன்படுவது உடல்மொழி மட்டுமே; அதுவும் வேகமான கைகால் அசைவுகள், முகபாவங்கள் முதலியன. அவன் பிடிபடும் மீன்களோடு கரை திரும்பியதும், பொருள் கெட்டுபோகும்முன், அவற்றை சரியான விலைக்கு விற்றுவிட வேண்டும்,எனவே பேரம் பேசுவதிலும் ஆத்திரம்,அவசரம்; இதுதான் மீன்கடை கூச்சல். விற்றதும் வீட்டிற்குச் சென்று கைமணிக்கட்டுவரை நனையுமளவுக்கு பழையச்சோற்றையோ வேறெதையோ உண்ணும் அவசரம், உண்ணும் உணவில் பிரதானமானது சுண்டச்சோறு, அது வயிற்றை நிறைக்கும், மணிக்கணக்கில் கடல் வெய்யிலில் காய்ந்த உஷ்ணத்தைக் கலைத்து, குளிர்ச்சியை உண்டு பண்ணி, மெலிதான போதையில் ஆழ்ந்த உறக்கத்தை தரும். இப்படியாக நிச்சயமற்ற வாழ்க்கை வாழும் அவன் தன் மொழியும், அலங்காரமற்று எதையும் நேரடியாக கூறும் தன்மை கொண்டதாக உள்ளது.

எடுத்துக்காட்டாக,”நீங்கள்” என்பது கூட அனாவசியம், ”நீ” என்பதே போதுமானது. இதில் மரியாதையான வார்த்தை, அவமரியாதையான வார்த்தை என்றெல்லாம் அவன் வேறுபடுத்தி பயன்படுத்த சூழல் அனுமதிப்பதில்லை.
இதே கடற்கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி வசிக்கும் அக்ரஹாரத்து பிராமணனை கவனி்ப்போம். அவன் இன்றைய நவீன யுகத்திற்கு மாறிவிட்டாலும் {மீனவர்களிலும் பலபேர் இப்படியே} சில ஆதாரமான அன்றாட நடவடிக்கைகள் கோயிலின் பூஜை கால நேரத்திற்கேற்றபடி நடக்கின்றன. அவற்றில் பெரும்பாலான சமயங்களில் மாற்றமே நிகழ்வதில்லை. எனவே ஏழையோ பணக்காரனோ, அவன் உணவு உட்கொள்ளும் போது ஒரு நிதானம், தட்டை சுற்றிலும் உணவு இரைவதில்லை, மூன்று நான்கு விரல்களுக்கு மேல் எச்சில் படுவதில்லை. அவாள் இவாள் போன்ற, அவனுக்கே உரிய விஷேஷமான வார்த்தைகள் உட்பட, அவன் பேசுகின்ற மொழியும்,பாதுகாப்பான கோயில் மதில்களுக்குள் சீராக ஒலிக்கின்றன, சாதாரண நேரங்களில் உடலசைவும் சீராகவும் நளினமாகவும் இருக்கும்.
இப்படியாக ஒரே ஜாதி, மதம், மொழியைப் பேசுபவன் சென்னையில் ஒருவிதமாக பேச, அவன் கடலூரில் மற்றொருவிதமாக, அதே கடலூரிலிருக்கும் கடற்கரையில் பேசுபவன் இராகம் போட்டு பேச, நாம் கொங்கு தமிழ், பொங்கு தமிழ், நெல்லை தமிழ், மதுரை தமிழ், சென்னை தமிழ், சென்னையின் உள்ளேயே வடக்கு தெற்கு என பிரித்து கொள்கின்றோம். இவ்வாறு கடல், வயல், மணல் என அவற்றை இடத்திற்கு தக விளங்கிக்கொண்டே போகலாம். இவற்றில் இதுதான் சிறந்தது, அது தாழ்ந்தது என ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அரிவாள்களையும் தூக்கிக்கொண்டு அலைவது அடிமுட்டாள்தனம், சரியாக சொல்வதெனில் படு அயோக்கியத்தனம்.
தமிழகம்,ஆந்திரா முழுவதையும் மற்றும் கர்நாடகம் கேரளாவின் சில பகுதிகளையும் யாவும் ஒன்றாக இருந்த சென்னை இராஜதானியில் எடுக்கப்பட்ட ஜாதிகளின் பட்டியலே, பல்வேறு காரணங்களுக்காக இப்போதிருக்கும் தமிழகத்தில் பயன்பட்டு வருகிறது. இப்பட்டியிலின்படி பல்வேறு மொழி ,மதங்களை சேர்ந்த சுமார் எண்ணூறு ஜாதிகள் உள்ளன.உட்பிரிவுகளை சேர்க்கவில்லை,சேர்த்தால் ஆயிரக்கணக்கில் போகும். தமிழகத்தில் பரவலாகவும், சிற்சில இடங்களில் கூட்டாகவும் வசிக்கும், இச்சாதிகளின் உடலசைவு மொழி ஒன்றுபோலவும் அதன் பொருள் ஒன்றயே தொனிக்குமா எனில், இதற்கான விடை 75% ஆம், 25% இல்லை என்பதாகும். அந்த 25 சதவிகிதமும் அவ்வபோது நிகழும் பல்வேறு காரணிகளால் இல்லை என சொல்ல வைக்கிறதே தவிர நிஜத்தில் அதற்கும் ஆம் என்று பொருள்.
சில அடிப்படை சைகைகள் நுணுக்கங்கள்
தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் எங்கு குழந்தை பிறந்தவுடன் மார்புக்காம்பிலிருந்து, யாரும் சொல்லிக்கொடுக்காமலே பாலை உறிஞ்சுகிறது. அதே குழந்தை வயிறு நிறைந்தவுடன் தலையை விலக்கி கொள்கிறது. அந்த குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், போதுமான அளவில் உண்டதும் வேண்டாம் என்று தலையை இடமும் வலமுமாக அசைக்கிறது. இன்னும் சற்று வளர்ந்ததும் போதும் என்பதற்கு ஆசீர்வாதம் செய்வதுபோல் மார்பளவில் கையை உயர்த்தி காட்டுகிறது. இதே சைகைகளை பிறவியிலேயே காது கேட்காத கண் தெரியாத குழந்தைகளும் செய்கின்றனர் என்பது இத்துறையில் தேர்ந்த வல்லுநர்களின் முடிவு.
நாம் சிலரை கூரியபுத்தி கொண்டவரென்றும் எதிராளியின் மனதிலோடுவதை சட்டென்று யூகித்து விடுவாரென்றும் வியந்து பாராட்டுவோம். பாராட்டுக்குரிய அந்த நபரின் திறமை என்னவெனில், எதிராளியின் எண்ணங்களை அவரின் கைகால் அசைவுகளின் வாயிலாக தெரிந்தோ தெரியாமலோ உணவர்வதுதான். சில நேரங்களில் எதிராளி பொய் சொல்கிறான் என உணர்கிறோம்,காரணம் அவனுடைய பேச்சும் உடல் மொழியும் ஒத்துப்போகாதது தான்.
சில அடிப்படை நிலைகள் சைகைகள் நுணுக்கங்கள்.
எழுத்துமொழி போலவே உடல்மொழிக்கும் நிறுத்தற்குறி, வாக்கியம், சொல் முதலான கூறுகள் உண்டு. வாய்மொழியில் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கும், அதை வாக்கியத்தில் பயன்படுத்தும் போது ஒரு அர்த்தத்தையும், அதே சொல்லை தனியாக பயன்படுத்தும்போது வேறொரு பொருளையும் தொனிக்கும்.
அதேபோல் உடல்மொழியிலும் ஒரு சைகையோ அல்லது அசைவோ, ஒரு பொருளை தொனிக்க, அதே அசைவு அதை தொடர்ந்து நிகழும் வேறுபல அசைவுகளோடு சேரும்போதில், முற்றிலும் மாறுப்பட்ட பொருளை தரக்கூடும்.எனவே பூரணமான உடல்மொழி என்பது, எதிராளியின் ஒட்டுமொத்த உடலசைவுகள் மற்றும் நிலைகளோடு,அவை நிகழும் சூழ்நிலையையும் கணக்கிலெடுத்துக்கொண்டு பொருள் காண்பதாகும். உதாரணமாக கையால் தலையை சொறிதல்-இதற்கு பேன்,பொடுகு, மறதி, நிச்சயமின்மை, பொய், அழுக்கு இவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். எனவே அவர் தலையை சொறிவதன் உண்மையான காரணத்தை அறிய அவரின் வாய்பேச்சு உடல் அசைவுகள் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை கூட்டி கழித்தே பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
சில காட்டுமிராண்டிகள் ஒரு குகையில் அமர்ந்தபடி அவர்களுக்கே உரித்தான பாஷையில் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதிலென்ன சிறப்பு என்றால், அவர்கள் யாவரும் விதிவிலக்கே இன்றி, தமது முதுகுபுறங்களை குகைச்சுவர்களில் சாய்த்த நிலையில் அமர்ந்திருக்கின்றனர். இந்நிலைக்கான ஆதாரக்காரணம் உயிர்பயம். யாராவது அல்லது மிருகம் வந்து முன்னே தாக்கினால் குறைந்தபட்சம் அறிந்து கொள்ளவாவது முடியும், ஆனால் ஓசையிடாமல் பின்பக்கமிருந்து தாக்கினால் என்ன செய்வது?அதனால் குகைச்சுவரை கேடயமாக பயன்படுத்துவது தான் இந்த நிலை.
இதே ஆதாரப்பயம்தான் இன்றய நவீன மனிதனின் மூளையிலும் பதிந்துள்ளது. அதற்காக அவன் குகை சுவர்களின் மேல்வைத்து முதுகை தேய்த்துக் கொள்வதில்லை, வீட்டிற்குள்ளும் அது நிகழ்வதில்லை. ஆனால் வேறு சூழ்நிலைகளில் வேறுபல நிலைகளை மேற்கொள்கிறான். உதாரணமாக சண்டை சச்சரவு அடிதடி முதலான குழப்பங்கள் நேரிடும் இடத்திற்கு சென்று அவைகளில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட மனிதர்களை கவனித்தால், அவர்கள் யாவரும் சொல்லி வைத்தாற்போல், ஒன்று கூடி பேசும்பொழுது, தெரு முனைகளிலோ அல்லது தெருவின் சந்திப்புக்களில் சந்தித்து கொள்வார். இவர்கள் வீட்டு பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தம்மையறியாமலே செய்யும் இக்காரியத்தின் பொருள் ஏககாலத்தில் சாத்தியமான வழிகளையும் கண்காணிக்க வேண்டும். இது சண்டையோ அடிதடியோ நிகழாத காலங்களில் கூட நடக்கும்.
அடுத்து இதே பகுதியில் இருக்கும் ஒரு நடுத்தர உணவுவிடுதியை காண்போம். அதன் வாசல் கிழக்கு பார்த்து இருக்க, உணவு உண்பவர் ஒன்று கிழக்கு பார்த்து அதாவது சாலையை நோக்கி அமரவேண்டும், அல்லது சாலைக்கு முதுகை காட்டியபடி மேற்கு பார்த்து அமர வேண்டும். அந்த உணவு விடுதியே வாடிக்கையாளர்களால் நிரம்பியிருக்க, ஒரு சிலர் மட்டும் அவர்கள் எப்பக்கம் அமர்ந்திருந்தாலும், சற்று உடலை தெற்கு பக்கம் பார்த்தாற்போல் அமர்ந்து உணவுன்பதை காணலாம். இதனால் ஒரேசமயத்தில் மூன்றுகோணங்களையும் கண்காணிக்க முடியும். நான்காவது பக்கமாக வடக்கில் சுவர் உள்ளது. அதனால் கவலையில்லை. இந்த நிலையில் அமர்ந்திருப்பவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர்கள் ஏதோ ஒரு வகையில்,அப்பகுதியில் நிகழும் தகராறோடு சம்பந்தப்பட்டிருப்பார்கள்.
இந்த நிலையை பொதுவாக எல்லா ஆண்களிடமும் ஏதோ ஒரு கட்டத்தில் பார்த்திருப்பீர்கள். முக்கியமாக ஒரு கையானது முகத்தின் மீது படிந்திருக்க, அக்கையின் சுட்டு விரலானது கன்னத்தின் மீதும்,நடுவிரல் வாயின் மீதும் இருக்க, கட்டைவிரல் முகவாயை தாங்கி உள்ளது. மற்றொரு கை உடலின் குறுக்கே இருக்க, ஒரு கால் மற்றொரு காலின் மேல் போடப்பட்டுள்ளது. தவிர முகமும் தலையும் சற்றே தாழ்ந்துள்ளது. நீங்கள் பேசும்போது உங்கள் நண்பரோ அல்லது வேறுயாரோ அவர் இந்த நிலையில் இருந்தால், உங்கள் பேச்சோடு அல்லது உங்களோடு ஒட்டுமொத்தமாக முரண்படுகிறார் என்று பொருள், ”என்ன நான் சொல்வது சரிதானே”, என அவரிடம் கேட்டு, அவர் ஆமாம் என்று பதில் சொன்னால் அவர் ஒருமாபெரும் பொய்யர். ஏனெனில் அப்போது கிடைத்த பதிலும் நிகழ்கின்ற உடல்மொழியும் ஒத்துபோகவில்லை.
அதேசமயம் ஒருவரின் நிலையை கணிக்கும்முன் சீதோஷ்ண நிலையை சேர்த்தே கவனிக்க வேண்டும். உதாரணமாக நல்ல குளிர்காலத்தில் பேருந்து நிலையத்திலோ அல்லது வேறங்கோ வெட்டவெளியிலோ ஒருவர்,கைகளை இறுக கட்டிக்கொண்டு,கால்மேல்கால் போட்டமர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் காரணம் குளிர் மட்டுமே;இதே நிலையில் ஒருவர் உங்களின் எதிரே அமர்ந்திருக்கிறார்,அவரொரு வாடிக்கையாளர்,நீங்கள் ஒரு விற்பனையாளர் எனில், அவர் உங்களோடு மாறுபடுகிறார் என்று பொருள். அதாவது உங்களின் வியாபார பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து விட்டதென பொருள்.
அது -2006-2007-ம் வருடம், சென்னை நகரமே நிலத்தரகு வியாபாரத்தை மும்முரமாக செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நானும் எனது நண்பரும் கூட அதில் குதித்தோம். நண்பர் ஐம்பது வயதான தெலுங்குகாரர். சிலமாதங்களில் ஏராளமான பணமும் நேரவிரயமும் உண்டாகி, அதில் ஒன்றுமே கிட்டாததால், இந்த விவகாரமே வேண்டாமென நான் முடிவெடுத்தேன். ஒருநாள் மாலையில் நானும் நண்பரும் கோயம்பேட்டில் சலவைக்கல் வியாபாரம் செய்துவரும் கொழுத்த பணக்காரர் ஒருவரை சந்திக்க சென்றோம். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. அன்றிரவு அவரின் அலுவலக அறையில் வேறு இரு ஆண்களோடு சேர்த்து நானும் நண்பரும் இருந்தோம். இருவரில் ஒருவர் ஒரு நிறுவனத்திற்கு நிலங்களை வாங்கிப்போடும் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி. மற்றவர் பிரதிநிதியின் தரகர். இந்த தரகரும் எனது நண்பரும் சேர்ந்துதான் அன்றைய தினம் நடைபெற்ற வியாபார பேச்சுக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இதில் எனக்கு எவ்வித ஆர்வமோ எதிர்பார்ப்போ இல்லாததால்,அமைதியாகவும் தெளிந்த மனதுடன் அமர்ந்திருந்தபோது, எனக்கு பக்கத்திலேயும் எதிரேயும் ஒரு நாடகமே நடந்து கொண்டிருப்பதை கண்டுகொண்டேன்.
அறைக்கதவை ஒட்டினாற்போல் நானும் எனது நண்பரும் அமர்ந்திருக்கிறோம். நான் சற்றே சரிந்தாற்போல் அமர்ந்து, கைப்பிடிகளின் மேல் கைகளை வைத்துக்கொண்டு கால்களை நீட்டிக்கொண்டிருக்கிறேன். எனது நண்பருக்கு என்னை விட உயரமும் பருமனும் அதிகம் .அவர் சற்றே தலையை தாழ்த்தியிருக்கிறார். இரண்டு கைகளையும் இறுகக்கோர்த்து தொப்பையின் மேல் வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு கால்களையும் குறுக்கிட்டுக்கொண்டிருக்கிறார். எங்களுக்கு ஐந்தடி தள்ளி அமர்ந்திருக்கும் நிலத்தின் சொந்தக்காரர் முகவாயை சற்றே நிமிர்த்தியிருக்கிறார். அவரின் கைமுட்டிகள் மேஜையில் ஊன்றியிருக்க, முகத்திற்கு நேராக இரண்டு கைவிரல்களும் கூப்பினாற்போல் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கின்றன. கால்கள் குறுக்கிட்டுக்கொள்ளாமல் பிரிந்த நிலையில் இருக்கின்றன. அவரின் எதிரே அமர்ந்திருக்கும் பிரதிநிதியும் அவரை பிரதி எடுத்தாற்போல் அதே நிலையில் அமர்ந்திருக்கிறார்.ஆனால் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் தரகரோ கால்களை குறுக்கிட்டுக்கொண்டு, இரண்டு கைகளையும் மேஜையில் படியவைத்து, விரல்களை இறுக்கமாக கோர்த்துக் கொண்டிருக்கிறார்.
நிலத்தின் சொந்தக்காரருக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.அவரிடம் ஏராளமான பணம்,இன்று இந்த வியாபாரம் முடியவில்லை என்றால், நாளை முடியும். அதேபோல் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும்; இந்த பேரம் முடியாவிட்டால் வேறொரு பேரத்தில் கணிசமான பணத்தை பார்த்துவிடுவார். ஆனால் எனது நண்பருக்கோ அல்லது அவரின் நண்பருக்கோ இந்த பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக முடியவேண்டும் அதன்மூலம் கமிஷன் கிடைக்க வேண்டுமே என்ற கவலை இருந்தது. உரையாடல் முழுவதும் எனக்கு புரியாத தெலுங்கில்தான் நடந்தது. ஆனால் நான்குபேரின் உடல்மொழியை கவனித்ததில் பேச்சுவார்த்தை தோல்வியடைய போகிறது என்ற என் யூகத்தை, வெளியில் வந்ததும் நண்பர் உறுதி செய்தார்.
🐩🐩🐩
ஆனால் மேற்சொல்லப்பட்டதுபோல் எல்லாருடைய உடல்நிலைகளும், அசைவுகளும், சைகைகளும் இதோ என்னைப் புரிந்துக்கொள் என்று நீண்ட நேரத்திற்கு மெதுவாகவும் நிலையாகவும் நிகழ்வதில்லை. இருப்பினும் இத்துறையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் ஒருசில விஷயங்களை உறுதிப்படுத்துகின்றன. அதாவது ஜாதிய அடுக்கில் சமுதாயத்தின் கீழ்தட்டினில் வைக்கப்பட்டவன், நிகழ்கால உலகின் நாகரிக பழக்கவழக்கங்களை காணாதவன், கல்வியோ அதிகாரமோ இல்லாதவன்,உடலுழைப்பை அதிகம் சார்ந்தவன் இவர்களெல்லாரும் வார்த்தைகளைவிட உடலசைவுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவனே தகுதியோ ,கல்வியறிவையோ, அல்லது நாகரிகத்தையோ, அதிகாரத்தையோ அதிகம் பெறபெற உடலசைவு குறைந்து அதிகமான் சொற்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
உடலசைவோ வெளிப்படையாகவும் நிதானமாகவும் நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் வயதாக ஆக அதே சைகை வேகமாகவும் நுணுக்கமாகவும் செய்யப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக ஐந்து வயது குழந்தையொன்று பொய் சொல்லும்போது, கைகளால் வாயை மூடிக்கொள்கிறது. அல்லது கைகளை பின்புறம் சென்று மறைத்துக்கொள்கிறது. அதே குழந்தை வாலிபவயதில் இருக்கும்போது, பொய் சொல்ல நேர்ந்தால், அவனுக்கு கற்பித்திருந்த ஒழுக்ககோட்பாட்டுகளின்படி உள்மனது,பொய் சொல்லாதே என்று மூளைக்கு ஆணையிடுகிறது. ஆனால் அனுபவம் காரணமாக, வேறுவழியின்றி பொய் சொல்லும்போது, அவன் வாயை மூடாமல் தன்கை சுட்டுவிரலால் வாயை தடவுகிறான், அல்லது மூக்கை தேய்கிறான். இப்படியாக சிலர் பற்களை கடித்துக்கொண்டும் பேசுவார்கள், அல்லது வாயை மூடிக்கொண்டு பேசுவார்கள். இச்சைகையின் பொருள் பொய் பேசுகிறான் என்ற பொருளை தந்தாலும், சிலர் தம் வாய்துர்நாற்றத்தின் காரணமாகவும் இந்நிலையை நிகழ்த்தக்கூடும். இப்படியாக வயதாக ஆக தேகமொழியை படிப்பதும் விளங்கிக்கொள்வதும் சற்று கடினம்.
மேற்சொல்லப்பட்டதிற்கிணங்க ஒருவர் கைகுலுக்கும்போது மென்மையாக குலுக்கினால் அவர் உறுதியற்ற மனம் படைத்தவர் என்று பொருள். ஆனால் எடுத்தக்காரியத்தை முடிப்பவர்களும், உறுதியான மனம் படைத்தவர்களும் மூட்டுவலி இருப்பின் மென்மையாகவே கைகுலுக்குவார். அப்படியே கைகள் நளினமாகவும் நுணுக்கமாகவும் பயன்படுத்த வேண்டிவரும் மருத்துவர்கள் ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் கூட மென்மையான முறையில் கைகுலுக்குவார்கள்.அதற்காக அவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
இவைத்தவிர இறுக்கமான பொருந்தாத உடை அணிந்திருந்தாலும், மதுவின் போதையிலிருந்தாலும் உடல்மொழி தவறான பொருள் தந்துவிடும்.
உடல்மொழியில் பொய் சொல்லமுடியுமா?என்றால் சில விதிவிலக்குகளை தவிர்த்து, முடியாது என்றே பதில் கிடைக்கும். நீங்கள் உண்மைக்கு மாறாக உங்கள் தோழரிடம் பொய் சொல்கின்றீர்கள். அப்போது சிரித்த முகம்,வெளிப்படையாக காட்டப்படும் உள்ளங்கைகள் என்று உடல் நிலையை அமைத்துக்கொண்டாலும், உடலில் ஏற்படும் சிறுசிறு அதிர்வுகளும் மாற்றங்களும்,பார்வையின் திசை மாற்றம், வாய் சற்றே கோணுவது முதலியன நிகழக்கூடும். இதேபோல் ஒரு பெண் பொய்பேசும்போது, அல்லது ஒன்றை மறைக்கும்போது தேவையில்லாமல் வேறு விஷயங்களை பேசுகிறாள், அதேசமயம் தேவையற்ற காரியங்களிலும் ஈடுபடுகிறாள். ஆனால் பொய் சொல்வதுதான் எனது தொழில் தர்மம் கடமை என்று மூளையில் ஆழப்பதிந்த எண்ணத்தோடு உடலசைவுகளையும் வெற்றிக்கரமாக மாற்றியமைக்கும், குற்றவாளிகள் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் ,உளவுத்துறையினர், அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்றவர்கள் இந்த விஷயத்தில் சற்று அதிக திறமை வாய்ந்தவர்கள் என்று சொல்லிவிடலாம்.
நமது நாட்டற்கேற்ற அவதாணிப்பு, நடைமுற உடல்மொழிக் கட்டுரை.ஒரு குறிப்பு படிப்போரின் மூலையில் பலவாறாக வானவேடிக்கை நிகழ்த்துகிறது.மொழிவாரிமாநிலமாக பிரிக்கப்படாத மெட்ராஸ் ராஜதானியிலிருந்து தொடரும் பண்பாட்டில், மொழிதூய்மை பார்ப்பதை வன்மையாக கண்டனம் செய்து, மணிப்பிரவாள நடையில் எழுதும் தாங்கள், மக்கள் அன்றாடம் பேசும் தமிழ்சொல் வழக்கிற்கு கூட சமற்கிருதத்தை பயன்படுத்துவதன் காரணம், சென்னையா,அனைத்தின்மேலும் பெருவெருப்பா,பாணியா,திட்டமா...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது ஒவ்வொரு சம்பவமும் அழகாக கூறப்பட்டுள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது ஒவ்வொரு சம்பவமும் அழகாக கூறப்பட்டுள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஜெ.சரவணன். தமுஎகச உறுப்பினர்