முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடல்மொழிக் களஞ்சியம்-அத்தியாயம்-2 மனிதன் எனும் விலங்கு--அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.

 உடல்மொழிக் களஞ்சியம்      அத்தியாயம்-2

 

மனிதன் எனும் விலங்கு--
அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.

 

 

யூரிலோகஸ் அறைக்குள்ளே இருந்த மாலுமிகள் யாவரும் வெவ்வேறு வகையான மிருகமாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்தான். உட்கொண்டிருந்த மதுவின் தாக்கம் சகல கட்டுப்பாடுகளையும் நீக்கி விட்டிருக்க ஒவ்வொரு ஆணின் தன்மைக்கேற்ப அங்கே ஒவ்வொரு வகையான மிருகம் தோன்றியது. ஒரு மாலுமி சர்ஸியின் மென்மையான தேகத்தை தொட்டதும், துடிக்கின்ற இரையை கரடுமுரடாக பற்றியிழுத்து,வான்பார்த்து ஊளையிடும் ஓநாயாக தோற்றமளித்தான். மற்றொருவன் பசுமீது பளுவுடன் பாயும் காளையாக மாறிவிட்டான். இன்னொருவன் சேற்றில் புரளும் முள்ளம்பன்றியாக காட்சியளித்தான். இவற்றோடு நீள்கொம்பு ஆடு, செம்மறியாடு, கீரிச்சிடும் குரங்கு, மான், கலப்பின நாய் இவை யாவற்றையும் அவன் ஒரே இடத்தில் கண்டான்.

--ஹோமரின் பள்ளியறை ஓடிஸி.

 

 தெரு நாய்களை பார்த்திருப்பீர்கள். அது அவ்வபோது தானிருக்கும் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் ஓடும். இடையிடையே வண்டிகள் தெரு கம்பங்களை மோப்பம் பிடிக்கும், பின் அவற்றின் மீது சிறுநீர் கழிக்கும், அந்த நாயை பொறுத்தவரை அந்த தெருவே அதன் ஆளுகைக்கு உட்பட்டதாகும். மோப்பம் பிடிப்பது வேறு ஏதேனும் அந்நிய நாய் உள்ளே வந்து சிறுநீர் கழித்திருக்கிறதா என்பதை அறிவதற்காக; சிறுநீர் கழிப்பது வேற்று நாய் உள்ளே வந்து மோப்பம் பிடித்தால், நான் ஒருவன் இங்கே இருக்கிறேன், ஓடிபோய்விடு என்பதை அறிவிப்பதற்காக. அதையும் மீறி வேறொரு நாய் உள்ளே புகுந்தால் களேபரம் நிகழும்.

 

இப்படியாக காட்டுக்குள் வசிக்கும் சிங்கம், புலி முதலான விலங்குகளுக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அந்த எல்லைக்குள் இருக்கும் பரப்பின் விகிதம் அவற்றின் எண்ணிக்கைகேற்ப கூடும் அல்லது குறையும். உதாரணமாக ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் ஒரு சிங்கத்தின் எல்லை ஐம்பது கிலோமீட்டர்வரை விரியும்.ஆனால் வேறொரு இடத்தில் வசிக்கும் அதன் எல்லைபரப்பு சில கிலோமீட்டர்கள் மட்டுமே. கூண்டினில் அடைப்பட்டிருந்தால் சொல்லவே வேண்டாம்!!! விலங்குகள் பறவைகள் மட்டுமல்ல, அவைகளைப்போல் மனிதனும் தன்னைச்சுற்றி எல்லைக்கோட்டை வகுத்து கொள்கிறான் என அமெரிக்காவை சேர்ந்த மனித தோற்றவியல் அறிஞரான எட்வர்ட்டி ஹால் என்பவர்,1960-களில் ஆராய்ந்து சொன்னபின், உடல்மொழியின் அறிவுத்துறை இன்னும் விசாலமடைந்தது, மற்றம் மனிதர்க்கிடையே நிகழும் உறவுமுறையின் மீது ஒளியைப் பாய்ச்சியது.

 

உலக உருண்டையே ஒரு சின்னஞ்சிறு கிராமமாக உருமாறிவிட்டது என்று உச்சரித்தாலும் அது தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில்தான். உண்மையில் ஒவ்வொரு நாடும் கூறுகின்ற எல்லைகளின் பரப்பளவை கூட்டிக்கழித்துப் பார்த்தால் அது உலக உருண்டையைவிட பலமடங்கு விரியும். இந்த உலகமே தேசங்களாக மாநிலங்களாக மாவட்டங்களாக தொகுதிகளாக கடைசியாக தெருக்களாக, வீடுகளாக அந்த வீட்டிற்குள்ளேயும் எனக்கென்று ஒரு அறை உனக்கென்று ஒரு இடம் என ஒவ்வொருவனும் அல்லது ஒவ்வொருத்தியும், தனக்கென்று தன்னை சுற்றி ஒரு எல்லையை வகுத்து கொள்கின்றனர். எல்லைகளின் சுற்றளவு சமூகம் நிர்ணயித்திருக்கும் அறிவு அதிகாரம் பின்புலம் மக்கள் அடர்த்தி இவற்றுக்கு ஏற்றாற்போல் சுருங்கும் அல்லது விரியும். இந்த எல்லைகள் அத்து மீறப்படும் பொழுது, மீறப்படும் சூழ்நிலை உறவு முறைகளைப் பொறுத்து வெவ்வேறு விதமான விளைவுகளை உண்டாக்கும்.

 

 

இன்னும் பத்தடி தூரந்தானே பரவாயில்லை என படகை விடும் மீனவனை இலங்கை கடற்படை சுட்டுத்தள்ளுகிறது. அதன் பின்புலத்தில் பல அரசியல் காரணங்கள் உள்ளன என வாதிக்கலாம். சரி இதே தமிழக மீனவன் ஆந்திர எல்லைக்குள் கடல்வழியாக நுழைந்தால் உதை வாங்குகிறான். தமிழகம் போலவே ஆந்திராவும் இந்தியாவில்தானே உள்ளது? கேரள வனத்துறையினர் தமிழக எல்லைக்குள் நுழைந்தால் அத்துமீறல் அட்டகாசம் என நாளிதழ்கள் கொதிக்கின்றனவே? சென்னைக்கு வடக்கே இருக்கும் பழவேற்காடு ஏரியை தமிழகம் ஆந்திரா என்ற இரண்டு எல்லைகள் உண்டு. இந்த இரண்டு எல்லைகளை சேர்ந்தவர்களும் ஏரியை மானசீகமாக பிரித்துக்கொண்டு தொழில் நடத்துகின்றனர். ஆனால் அவ்வபோது அவர்களுக்குள் அடிதடி கலவர நிகழ்வுகள் நடந்துக்கொண்டு தானிருக்கின்றன.

 

 

இதேபோல் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இதற்குண்டான முழுமையான காரணத்தை நாம் ஆஸ்திரேலியர்கள் மீது போட்டுவிட இயலாது. ஏறத்தாழ அது இந்தியாவைவிட பெரிய நாடு. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட அதன் மொழி ஆங்கிலம், அதையும் மெல்ல பேசுவார்கள். தாக்கப்பட்டவர்களில் பெருமளவு நபர்கள் இந்தியாவின் நெரிசல் மிகுந்த மாநிலத்தில் வசிப்பவர்கள், அவர்களின் மொழியையும் உரக்க பேசுவார்கள். தவிர அவர்களின் உடல் மொழியும் சற்றே கடுமையாக இருக்கும். அதாவது இந்தியாவின் நெரிசல் நிறைந்த இடத்தில் வசிப்பவர்கள், ஆஸ்திரேலியா சென்றபின்னர், அங்கே உரக்க பேசுவதும், படுவேகமான உடல் மொழியை பயன்படுத்துவதும் நிகழ்ந்திருக்கும். சாதாரணமாகவே சப்தமின்றி, மென்மையான உடல் மொழியை பயன்படுத்துகின்ற ஆஸ்திரேலியர்களுக்கு இது எரிச்சலை மூட்டிவிட்டிருக்கக்கூடும், தவிர ஒருவனை அடிக்கப்போக, அந்த விஷயம், பெரும்பாலனோரின் மனதில் விஷமாக படிந்திருக்க, சம்பவமானது தொடர்ந்து நிகழ்ந்திருக்கும். இப்போது விஷயம் எளிதில் புரியுமன்றோ!

 

 

இந்த எல்லைகளை ஆதிகால மனோபாவ எல்லை, குடும்ப எல்லை, அந்தரங்க எல்லை என்று மூன்று பிரிவுகளாக வகுத்திருக்கின்றார். டெஸ்மெண்ட் மோரிஸ், மற்றும் ஆலன் பீஸ் என்பவர் இந்த எல்லைகளை அல்லது இடைவெளிகளை நான்காக வகுத்திருக்கிறார். இதையே நானும் பின்பற்றுகிறேன்.




1] அந்தரங்க இடைவெளி அல்லது எல்லை;ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு அந்தரங்க இடைவெளி என வரையறுக்கப்படும் இந்த இடம் முக்கியமானது. அவனோ அல்லது அவளோ எங்கு சென்றாலும் இந்த இடத்தை தூக்கிக்கொண்டு அலைவார்கள். இந்த இடைவெளியின் தூரம் 6 லிருந்து 18 அங்குல தூரம்வரை அல்லது அரையடியிலிருந்து ஒன்றரை அடி தூரம்வரை இருக்கும். அவன் அல்லது அவளுக்கு நெருக்கமான பெற்றோர், காதலன், காதலி, கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர், நெருக்கமான நண்பர் மட்டுமே இதற்குள் நுழையலாம். 1லிருந்து 6 அங்குல வரையிலான தூரம் மிகவும் அந்தரங்கமானது. கலவி, காதல், சண்டையின் போது பிரவேசிக்கப்படுவது அல்லது ஆக்ரமிக்கப்படுவது.


2] சொந்த இடைவெளி--1.5 அடியிலிருந்து 4 அடி தூரம்வரை இருக்கும். திருமணம், விருந்து அல்லது நண்பர்களோடு பேசும்போது இத்தூர இடைவெளியை நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.

 

3] சமூக எல்லை--4 முதல் 12 அடி தூரம்வரை, நமக்கு அவ்வளவு பழக்கமில்லாத நபர்களிடமிருந்து இத்தூரத்தில் இருக்க முயல்கிறோம். உதாரணமாக தபால்காரர், நன்கொடை வசூலிப்பவர், தெருவை சுத்திகரிப்பவர் முதலான நபர்களிடம் இருந்து இவ்விடைவெளியை பாதுகாக்க முயல்கிறோம். அதேசமயம் மருத்துவர், முடிவெட்டுபவர் முதலானவர்களிடமிருந்து இந்த தூரமளவுக்கு இருக்க முடியாது என்றாலும், அங்கேயும் ஒருவனது அந்தரங்க அல்லது சொந்த இடைவெளி பாதுகாக்கபடுகிறது.

 

4] பொது எல்லை--12 அடி தூரத்திற்கு மேல்.மேடையில் நின்று உரையாற்றும் போதோ அல்லது பிரசங்கம் செய்யும் போதோ, பார்வையாளருக்கும் உரையாற்றுபவருக்கும் இடையே குறைந்தபட்சம் 12 அடி தூரமிருந்தால்தான் வசதியாக இருக்கும்.



 

எல்லைகளின் தூரத்தை புரட்டி போடும் காரணிகள்.

 

நெரிசல் மிகுந்த பேருந்து. ஷேர் ஆட்டோ, திரையரங்கு, லிஃப்ட், கடைகள் முதலானவற்றுள் அவசியம் கருதியோ, நிர்பந்தம் காரணமாகவோ, நாம் உள்ளே நுழையும்போது, அந்தரங்க எல்லைகள் அத்து மீறப்படுகின்றன. அப்போது நாமும் நம் சக மனிதர்களும் சொல்லப்படாத சில விதிகளை தெளிவாக பின்பற்றுகிறோம். நமக்கு அறிமுகமான நபர் உட்பட யாரிடமும் பேசமாட்டோம். அடுத்தவரின் கண்களை பார்க்க மாட்டோம். முக உணர்ச்சிகளை மறைத்து கல்போல் சமைந்திருப்போம். உடலை சற்றும் அசைக்கமாட்டோம். நாளிதழோ புத்தகமோ இருந்தால் அல்லது செல்போனிலோ மூழ்கிவிடுவோம். லிஃப்டாக இருந்தால் மாடிகளின் எண்ணிக்கையை எண்ணி கொண்டிருப்போம்.

 

என்றாவது நீங்கள் காலியான திரையரங்கம் சென்றால், ஆங்கே ஆளில்லா வரிசையில் ஏதாவது ஒரு மூலையில்தான் அமருவீர்கள். உங்களுக்கு அடுத்ததாக வருபவர் மறுகோடியில் அமராமல் நடுவில்தான் அமருவார். இதற்கு காரணம் அடுத்தவரோடு ஒரேடியாக ஒட்டக்கூடாது,அதேசமயம் ஒட்டாமலிருக்கவும் கூடாது என்பதுதான். திரைப்பட இடைவெளியின் போது சிறுநீர் கழிக்கச்சென்றாலும் இதேவிதிதான்.

 

ஆக ஒரு நெரிசலான கும்பலுக்குள் நீங்கள் இருக்க உங்களை நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் அந்நியர்கள், அறிமுகமில்லாதவர் யாராக இருந்தாலும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான். ஆக தனிமையில் இருக்கும் போது உங்களின் முகபாவம் எப்படியிருக்குமோ அதேபோல் இங்கும் இருக்கும். நீங்கள் கூட்டத்தினுள் மாட்டிக் கொண்டிருக்கும்போது, அந்தரங்க எல்லையானது ஆக்ரமிக்கப்படுவதால், உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, ஆழ்ந்த அமைதியில் இருக்கும்படி,முன்பே தீர்மானிக்கபட்ட விதிகளால் அறிவுறுத்தப்படுகிறீர். அதேசமயம் இவ்விதிகள் வன்முறை செய்யும் கும்பலையெல்லாம் கட்டுப்படுத்தாது. முன்னமே அக்கும்பலில் இருக்கும் ஒவ்வொரு மனிதன் மனதிலும், வன்முறை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொதிந்துள்ளது. மற்றும் அக்கும்பலின் அடர்த்தியை பொறுத்து, அவனது அந்தரங்க எல்லை ஆக்ரமிப்பு செய்யப்பட அமைதிக்கு பதில் ஆத்திரமும் கோபமும்தான் வருகிறது. இதனால்தான் காவல்துறை கும்பலை சிதறடிக்க செய்ய முயலுகிறது. அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இடங்களில் அதிக அளவு குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களில் இதையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம்.

 

உடல்மொழியை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்தந்த பிரதேசங்களின் தட்பவெப்பம், குளிர், கடல், மணல், மலை முதலானவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

ஒருமுறை குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தேன், வரிசை சில இடங்களில் நெரிசலடையும். ஒரு சில இடங்களில் ஒவ்வொருவரும் சுமார் அரையடி இடைவெளியில் நிற்க வசதியாக இருக்கும். எனக்கு பின்புறம் சுத்தமான தெலுங்குகார பையனொருவன் நின்றிருந்தான், ஆனால் அவனோ அரையடிக்கும் குறைவாக முன்னே நகர்ந்து ஏறத்தாழ என் பின்னங்கழுத்தில் மூச்சு விடுமளவுக்கு வந்து நிற்பான். அப்போது அவன் நடவடிக்கை எரிச்சலை தந்தாலும், பிற்பாடு அதன் காரணம் புரிந்தது. அவன் என்னைவிட மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த இடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளேயே அதிக நபர்களுடன் வசித்துக்கொண்டிருக்க வேண்டும். பிற்பாடு மலையின் மீதிருந்த உணவு விடுதியில் அமர்ந்தபோது வேறுசில தெலுங்குகார ஆட்கள் எங்களை நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்து எரிச்சலூட்டியது நினைவுக்கு வந்தது.

 

ஒரு காலகட்டத்தில் நான் கடையொன்றை நடத்திக் கொண்டிருக்கும்போது என்னிடம் இளைஞன் ஒருவன் வேலை செய்துக் கொண்டிருந்தான். கடை என்னமோ சிறியதாக இருந்தாலும், அங்கிருந்த ஒவ்வொரு சொற்பமான பொருளுக்கும் போதுமான அளவில் இடமிருந்தது. ஆனால் அந்த இளைஞன் ,பேனா பென்சில் ஸ்டேபிளர் முதலான எல்லா பொருட்களையும் மேஜையின் ஒருபுறத்திலேயே குவித்து வைத்து விடுவான், அல்லது இழுப்பறையிலே திணித்து விடுவான். பின்னொரு நாளில் அவன் வீட்டிற்கு சென்றபோதுதான் விஷயம் விளங்கியது. அவனுடையது சதுரமாக கட்டிவைக்கப்பட்ட ஓலைக்குடிசை, உள்ளே ஒரு இரும்புக்கட்டில். கட்டிலுக்கு கீழ் தேவையற்ற பொருட்கள், கட்டிலுக்கு மேலே தேவையான பொருட்கள், திருமணமானால் மனைவியை எங்கே கொண்டுபோய் வைப்பான், கட்டிலுக்கு மேலேயா அல்லது கீழேயா என்று குழம்பி போனேன். ஆக அன்றைய தினமே அவனை கொண்டுபோய் ஒரு அரண்மனையில் குடிவைத்தாலும், அந்த இடத்தோடு ஒன்றுவதற்கு குறைந்தபட்சம் ஒருவருட காலமாவது பிடிக்கும்.

 


நான்கு எல்லையில் முக்கியமானது அந்தரங்கம் மற்றும் சொந்த இடைவெளிகள் ஆகும். உறவினர், நண்பர், காதலன், காதலி, கணவன், மனைவியென அந்தரங்க எல்லை மீறப்பட்டாலும், அதிலொரு நுணுக்கமான வேறுபாடு உண்டு, ஒரு ஆண் தன் தோழனை கட்டியணைப்பதற்கும், காதலியை கட்டியணைப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? முன்னதில் அந்தரங்க உறுப்புகள் தீண்டப்படமாட்டாது, பின்னதில் அவைதான் அழுத்தமாக தீண்டப்படும்.


 

 

கைக்குலுக்குவதிலும் கூட அந்தரங்க எல்லையின் தாக்கம் உள்ளது. உதாரணமாக நகரத்தில் வசிப்பவர் சற்றுநெருங்கி வந்து கைகுலுக்குவார். நகரத்தின் விளிம்பில் சற்று அடர்த்தி குறைவான இடங்களில் இருப்பவர் கையை முழுமையாக நீட்டி குலுக்க, இருவருக்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டடி தூரமாவது இடைவெளி இருக்கும். பத்து தெரு ,நூறு வீடுகள் கொண்ட கிராமங்களில் வசிக்கும் நபர்கள், தூரத்தில் இருந்தே கையசைத்துக் கொள்வதைப் பார்க்கலாம்.

 

இடம் சார்ந்த முதலாளித்துவம் அவரொரு அமெரிக்க கோடீஸ்வரர். பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பணக்காரர்களின் வரிசையில் முதல் பத்து இடங்களில் இருந்தவர். அவர் தினந்தோறும் மாலைவேளைகளில் ஒரு உயர்தரமான ரெஸ்டாரெண்ட்க்கு செல்வார். அங்கே குறிப்பிட்ட மேஜையில் மட்டுமே அமருவார். அவரின் இந்த தினசரி நடவடிக்கையானது எவ்விதமாற்றமுன்றி நெடுநாட்களுக்கு நடந்து வந்தது. எனினும் ஒருநாள் அவர் விடுதிக்குள் நுழைந்ததும் அவரின் மேஜையில் வேறொரு வாடிக்கையாளர் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அப்பணக்காரர் கடும்கோபமுற்று முதலாளியை அழைத்து, ஒரே காசோலையில் அந்த ரெஸ்ட்ராண்ட்டையே விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த வாடிக்கையாளர் அப்புறப்படுத்தப்படவிட அந்த மேஜையில் அமர்ந்து உணவுண்டார். பிறகு தனக்கு சப்ளை செய்த சர்வருக்கே ஓட்டலை டிப்ஸாக தந்துவிட்டு கம்பீரமாக புறப்பட்டுப் போனார்.

 

 

“எறும்பும் தன் கையால் எண்சாண் உடம்பு” என்றொரு தமிழ் பழமொழி உண்டு. அமெரிக்க கோடீஸ்வரர் அளவுக்கு பணமோ தகுதியோ இல்லையென்றாலும்,ஒவ்வொரு மனிதனும் தனக்கு மட்டுமே சொந்தமென்று ஒரு இடத்தையும் பொருளையும் கொண்டாடுகின்றான். உதாரணமாக நீங்கள் ஒரு ஓட்டலுக்கு சென்று, பத்து நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ ஒரு மேஜையின் மீது அமருகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எதிராக வேறொருவர் உணவு உண்டு கொண்டிருக்கிறார் எனில், அப்போது மேஜையில் சரிபாதி இடம் உங்களுடையதாகும். உங்களுக்கு சொந்தமான இடத்தில், எதிர் நபரின் தட்டோ அல்லது தம்ளரோ நகர்த்தப்பட்டால் உங்களை அறியாமலே நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இப்படியே தான் வசிக்கும் வீட்டிற்குள்ளேயே நாற்காலி, மேஜை என்று சொந்தம் கொண்டாடுபவன் அவை இதர குடும்ப உறுப்பினார்களால் ஆளப்படும்போது கோபங்கொள்கிறான்.

 

 

ஒருமுறை நான் நண்பனொருவன் வீட்டிற்க்கு சென்றபோது, சோபாவில் இடையூறாக இருந்த, தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். அது நண்பனின் தங்கை பிரத்தேயகமாக பயன்படுத்தும் பொருளாகும். இந்த விஷயம் எனக்கு தெரியாது. தவிர சற்றுநேரம் நான் வைத்துக்கொள்வதால் தலையணை ஒன்றும் தேய்ந்துவிடாது. ஆனால் ஒருசில விநாடிகளில் அந்த பெண் கோபமுற, நண்பனின் அம்மா அந்த தலையணையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டார். இதற்கான காரணம் மேலே சொல்லப்பட்ட விதிதான், இன்றும்கூட கட்டுப்பெட்டித்தனம் மாறாத, பெண்களின் ஆதிக்கமாக திகழ்வது அவர்களின் சமையலறை கூடந்தான், அவற்றுள் அந்நியர் நுழைவதை அவர்கள் விரும்புவதே இல்லை.

 

ஆகவே ஒரு வீட்டிற்கு விஜயம் செய்தால், சொந்தக்காரர் சொல்லும் இடத்திலோ அல்லது நாற்காலியிலோ அமர்வதே சாலச்சிறந்தது.

 

 இதேபோல் காரில் செல்பவர்கூட ஒரு சில அசாதாரண சூழ்நிலைகளை தவிர்த்து முன்னும் பின்னும் பத்திருபது அடி தூரத்தை இடைவெளியாக கொள்கிறார். இதில் ஏதேனும் மாற்றம் வந்தால் அவரது உடலும் மனமும் மாறுதல் அடையும்.

 

ஆக இடம் சார்ந்த முதலாளித்துவத்தைப்பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம். இவையெல்லாம் மண்ணுக்கு மேலே நிகழ்வதாகும். அப்போது மண்ணுக்கு கீழே இந்த முதலாளித்துவமெல்லாம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எனக்கு தெரியாது நான் அனுபவபட்டதில்லை, ஒருவேளை சென்றால், சாத்தியப்பட்டால் அதையும் எழுதுவேன். 

கருத்துகள்

  1. உடல்மொழிக் களஞ்சியம்- மிகவும் அருமையாக உள்ளது. ஆழமான விஷயத்தை கதை வடிவில் இலாவகமாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர். தமிழன்னைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக இந்நூல் திகழும்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம்-3 தொடர்ச்சி.

 உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம் 3 தொடர்ச்சி. கைக்குலுக்குதலும் கையெடுத்துக் கும்பிடுதலும். ஆளுமைப்படுத்துவது, ஆளுகைக்கு கீழ்படிவது மற்றும் சரிசமமாக கைக்குலுக்குவது என்ற பொதுவான நிலைகளை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேற்கண்ட படத்தில் காணப்படும் பெண் ஆளுகைக்கு கீழ்படிவது என்ற நிலையில் அந்த நாயோடு கைக்குலுக்கின்றார் என்றால், அந்த நாய்க்கு தன் கையென்ற காலை திருப்ப முடியாது என்ற நிலையே காரணம்! பொதுவாக புகைப்படங்களில் பார்ப்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள், அவை அந்தந்த கணத்திற்கு நிகழுபவை!!!                                            மூன்றுவிதமான                                                     கைக்குலுக்குகள் இப்போது இந்த மூன்றுவித கைக்குலுக்குகளை பற்றி பார்ப்போம். சிலர் கைக்குலுக்கும் போது உள்ளங்கையை கீழ்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு க...

உடல்மொழிக் களஞ்சியம் 3

அத்தியாயம்-3 கையெடுத்துக் கும்பிடுதல், கைக்குலுக்குதல், மற்றும் உள்ளங்கை சைகைகள்.  சின்ன வயதில் அடிக்கடி கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு சிறுவயது நண்பர்கள் அடர்ந்த காட்டுவழியே பயணம் செய்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு கரடி வருவதை பார்த்து உடல்நடுங்கி நின்றனர். இருவரில் ஒருவனுக்கு மரம் ஏறத்தெரியும். அதனால் சட்டென்று அருகிலிருந்த அடர்ந்த மரத்திலேறி தப்பித்துக்கொள்கிறான். அடுத்தவன் என்ன செய்வது என்று முழித்தபோது, “அசையாமல் மல்லாந்து படுத்திருந்து, மூச்சுக்கூட விடாமல் இருந்தால், செத்துப்போய் விட்டான் போலுள்ளது, என நினைத்து கரடி போய்விடும்”, என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்குவர, அதேபோல் செய்கிறான். கரடியும் அவன் அருகே வந்து, குனிந்து சற்று மோந்து பார்த்துவிட்டு, பேசாமல் சென்று விடுகிறது. மரத்தில் இருந்தவன் கீழே இறங்கிவந்து, “கரடி உன்னிடம் ஏதோ சொன்னதே, என்னது அது?”, என்று கேட்கிறான். “ஆபத்துக்காலத்தில் உதவாதவனை நண்பனாக கொள்ளாதே என கரடி சொன்னது”, என இவனும் பதில் கூறுகிறான்.  நாய்கள், பூனைகள், புலிகள் என எல்லா விலங்குகளும் தமக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றன. சண்டைக்கு உயிர்,உ...