உடல்மொழிக்களஞ்சியம்
பெரு.முருகன்.
முன்னுரையாக சின்னதொரு உரை.
ஒவ்வொரு நொடியும் ஏதோவொரு விஷயத்தை உணர்த்துகின்றன,அந்த ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.உங்கள் உடலானது ஒவ்வொரு கணத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.உடலின் அந்த மொழியை நீங்கள் அறியமாட்டீர்கள்,அதாவது மனித உடலுக்கென்று சொந்தமாக மொழி ஒன்று உள்ளது,அது மனதிலிருக்கும் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக காண்பித்துவிடும்,அதை உங்களால் ஏமாற்றி மறைக்கவே முடியாது.வாய்மொழியில் எப்படியாப்பட்ட ஜாலத்தை வேண்டுமானலும் காட்டலாம்,ஆனால் உடல்மொழியை பொறுத்தவரை அதற்குண்டான சாத்தியக்கூறே கிடையாது.
-ஓஷோ
உடல்மொழியின் அர்த்தங்களை சரியாக விளங்கிக்கொள்வதென்பது மாபெரும் வரம். ஆனால் அந்த வரத்திற்க்குள்ளே ஒரு சாபம் பொதிந்துள்ளது,இத்தனைநாள் அன்பாக ஆசையாக உண்மையாக இருந்த நபர்களெல்லாம்,நிஜத்தில் அதுபோல் நடித்துக் கொண்டிருந்தனர்,என்பதை அறியவரும்போது,உங்கள் மனதை நார்நாரக கிழித்து எறியுமே ஓர் வேதனை,அதுதான் அந்த சாபம்.எனினும் அந்த சாபம் தரும் வேதனைகளை நீங்கள் தாங்கிக்கொண்டால் உதாசீனப்படுத்தினால்,வேறுசில வரங்களும் கிடைக்கக்கூடும்.
சுவாமி விவேகானந்தர் தன் சீடருடன் உரையாடிக்கொண்டிருந்த போது சொன்னாராம். [ஞான ஜோதி ,ஏதோவொரு பாகத்தில்] “பிறர் மனதில் நடப்பதை அறியவேண்டுமா?அந்த வித்தை வெகு சுலபம்,அதை கற்றுக்கொண்டுவிட்டால் அடுத்தவர் உள்ளத்தில் நடப்பது படம்போல் தெளிவாக தெரியும்”.சரிதான்! விவேகானந்தர் குண்டலினி ,இராஜயோகம், ஆத்மா,சித்துவேலை என்றெல்லாம் பேசுவார்,அல்லது கரடி விடுவார்,அவர் சொல்வதெல்லாம் நம்மால் ஆகாது அல்லது,நம்ப இயலாது என்றெல்லாம் நீங்கள் எண்ண நேர்ந்தால்,அறிவியல் புனைகதைகளில் அதீத புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்தர் சி கிளார்க்கின் வார்த்தைகளை கவனியுங்கள், “மாயாஜாலத்திற்கும் நன்கு முன்னேறிய அறிவியலுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது”, ஆம் உடல்மொழி என்பது நன்கு முன்னேறிய அறிவியல் திறமைதான்,அல்லது மாயாஜாலம்தான்.
ஜோதிடம்,கைரேகை,அங்கசாஸ்திரம் முதலானவற்றை தொடர்ந்து,இப்போது உடல்மொழியும் புறப்பட்டிருக்கின்றது என்று சிலர் கூறலாம்.அதை சில உதாரணங்களின் மூலம் மறுத்து உடல்மொழி உண்மையென நிரூபிக்க முயல்கிறேன்.ஒரு திரைப்படத்திற்கு போகின்றீர்கள் ,எல்லாமே நன்றாகத்தானுள்ளன,கதை,திரைக்கதை ,வசனம்,இசை,பாடல்கள்,மற்றும் கதாநாயகியின் தொப்புள் வரை படம் நன்றாகவே உள்ளது,ஆனால் டைரக்ஷன் எனும் இயக்கம் எனும் நெறியாள்கை தான் சரியில்லை எனும் விமர்சனத்தை வைக்கிறீர்கள் என்றால் அதற்கென்ன பொருள்?கதை நிகழும் காலக்கட்டத்திற்க்கு மற்றும் இடத்திற்கு ஏற்றவாறு நடக்கும் பேச்சு,கைகால் அசைவுகள்,முகபாவம்,தொனி முதலானவற்றை,சரியாக கையாள இயக்குநர் தவறி விட்டார் என்பதுதானே?அந்த விமர்சனம்.அதுதான் உடல்மொழி.
பத்து வயதிருந்தால் பக்கத்து அறைக்கு அனுப்பிவிடலாம்,ஒன்றிரண்டு வயதாக இருந்தால் கவலைப்படாமல் இருந்துவிடலாம்,ஆனால் நான்கோ அல்லது ஐந்து வயது குழந்தையாக இருந்துவிட்டால் என்ன செய்வது?கண்கள் நன்றாகவே மூடியிருக்கும்,மூச்சு விடுவதைத்தவிர வேறு அசைவுகளில்லை,தவிர எதிர்ப்புறம் திரும்பி படுத்திருக்கிறான் என்று,இங்கே சில்மிஷத்தை தொடங்கினால்,சற்றுநேரம் போகட்டும்,குழந்தை இன்னும் தூங்கவில்லை என மனைவி எச்சரிப்பாள்,சரிதான் வேண்டாம் என்றால் விட்டுவிடப் போகிறோம் என்று பொய்யாக யோசிக்கும்போதே,குழந்தை தடாலென்று எழுந்தமர்ந்து, “உச்சா போணும் தண்ணி வேணும்”, என்றுகூறி திடுக்கிட வைக்கும்.இதே வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் உங்கள் தோழர்களிடத்தில் சொல்லிப்பாருங்கள்,நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டுவார்கள்.கூடவே, இவளுக்கு மட்டும் எப்படித்தான் தெரிகிறதோ என்று வியந்துவிட்டு,முந்தினநாள் கிரிக்கெட் பற்றியோ அல்லது உக்ரைன் இரஷ்ய போரையோ பற்றியோ அலசப்போய் விடுவார்கள்.
மேற்சொல்லப்பட்ட இந்த உள்ளுணர்வு பெண்களுக்கு இயல்பிலேயே அதிகம்,சிறு அசைவுகளைக்கூட அவர்களது மனமானது அர்த்தப்படுத்திவிடும்.காரணம் ஒரு பெண் இயற்கையிலேயே யதார்த்தமானவள்,ஆணைவிட அதிகளவு மண் சார்ந்தவள்.தவிர இருபாலினத்து அசைவுகளையும் தன் உடல் சார்ந்து கருவினில் அனுபவிப்பவளும் அவளே!இவற்றை தவிர்த்து வேறொரு காரணத்தையும் நாம் அனுமானிக்கலாம்.ஆதியில் தாய்வழி சமூகங்கள் நிலவிவந்த நேரங்களில் அவளே தலைவியாக,இனக்குழுவை வழிநடத்தி செல்பவளாக இருந்து வந்தாள்.எடுத்துக்காட்டாக 1950-க்கு முன்பாக கேரளதேசத்தில் சில ஜாதியினரிடையே தாய்வழிச்சமூகம் நிலவிவந்தது.இதில் பல மகன்கள் பல மகள்களோடு பல கணவர்களும் அவளுக்கு வாய்த்தனர்.ஒரு தலைவியாக இருந்த காரணத்தால்,அவள் எல்லோரையும் ஊன்றி கவனித்துவந்த காரணத்தால் அவளுக்கு இந்த திறமை வாய்த்து இருக்கக்கூடும்.
மனிதக்குலம் தோன்றி இந்த இருபத்தோராம் நூற்றாண்டு வரையில் உடல்மொழி இருந்தும் அதை அறியாமற் போனதன் காரணம் என்னவென்றால் அறியாமை தான்.சர் ஐசக் நியூட்டன் மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்தாரே அப்போது ஏற்பட்டது தானா புவி ஈர்ப்பு சக்தி?இல்லை பூமிபந்து உருவான நாளிலிருந்தே இருக்க,அதை ஆப்பிள் வாயிலாக நியூட்டன் கண்டுபிடித்தார்.அதே போல் இந்த உடல்மொழியும் ஆரம்பத்திலிருந்தே இருந்து வர,1960-களில் அப்படியொரு விஷயம் இருக்கிறதென அறியத்தொடங்கி,இன்றையக் காலகட்டம்வரை கண்டுபிடிக்கப்பட்ட உடல் அசைவுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?சுமார் ஒரு இலட்சம்.இதில் ஆயிரம் அசைவுகளில் தேர்ந்துவிட்டலே அதிமனிதன் ஆகிவிடலாம்.
அற்புதமான உடல்மொழியை அதுகூறும் அர்த்தங்களை கற்றுக்கொள்வது சாத்தியமா எனில் நூறுசதவிகிதம் சாத்தியமே!
ஒவ்வொருவரிடமும் அதற்குண்டான வித்து இயற்கையிலே இயல்பிலே உள்ளது.முதலில் உங்களை பொறுத்தவரை உலகமே உங்களில் இருந்து தொடங்குவதால்-ஆண்டவன் ஒவ்வொரு மனிதனையும் படைக்கும் போது,உலகிலேயே உன்னதமானவன் நீ தான் என்று சொல்லி அனுப்புகிறான் என்றொரு அராபிய பழமொழி உள்ளது-அவ்வபோது நீங்கள் அமர்ந்திருக்கையில்,நடக்கையில்,படுத்து இருக்கையில்,உங்களின் மனதிலோடும் எண்ணங்களோடு,உடலசைவுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.இதை தொடர்ந்து செய்யசெய்ய உங்களை உங்களுக்கே புரியும்.
மக்கள் அடிக்கடி கூடுகிற இடங்களாக பார்த்து உதாரணமாக கடற்கரை தியேட்டர் முதலான இடங்களில்,தினந்தோறும் ஒரு அரைமணிநேர வரையில் அவர்களின் உடல் அசைவுகளை கண்டுவந்தால் மெல்லமெல்ல தேர்ச்சி ஏற்படும்.இப்போது மொபைல், யூட்யூப்பில் நிறைய வீடியோக்களை பார்க்கும் வாய்ப்பு அதிகம்,அவற்றை உடல்மொழி படித்தறிந்து பார்த்தீர்களேயானால், அப்போது விவேகானந்தர் சொன்ன வித்தை சித்திக்கும்,அல்லது ஆர்தர் சி கிளார்க் சொன்ன அறிவியல் நுட்பம் மண்டைக்குள் ஏறும்.எதிராளியை நாம் அலசி ஆராய்கிறோம் என்பதை அவர் சற்றும் உணராத வண்ணம் உங்களுடைய பார்வை படுவேகமாக இயங்கி அவரின் உடல்மொழியின் பொருளை அறியுமளவுக்கு முன்னேறிவிட்டால் நீங்கள் மேதமை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள்!
நானெழுதும் இந்த நூலானது ஒருவகையினில் மொழிபெயர்ப்பே என்று கூறினாலும்,சென்னை நகரின் மக்களின் உடல் அசைவுகளை நன்கு புரிந்துக்கொண்ட பிறகே எழுதுகிறேன்.எண்ணற்ற மேனாட்டு அறிஞர்கள் உடல்மொழியைப்பற்றி ஏராளமான நூல்களையும் ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளனர்.அவர்களில் முக்கியமாக டெஸ்மண்ட் மோரிஸ்,நெய்ரன்பர்க்,ஆலன் பீஸ்,ஆலன் பார்பரா அவர்களில் முக்கியமானவர்கள்.
பெரு.முருகன்.
Perumurugan6@gmail.com

Nice sir.. interesting topic ❤️❤️
பதிலளிநீக்குNice one sir great work ... expecting more and more From you in the future.
பதிலளிநீக்குபிரமாதமாக உள்ளது
பதிலளிநீக்குதுவக்கமே...இதற்கு
நீங்கள் நிறைய
மனிதர்களை நன்றாக அவதானித்திருக்க வேண்டும்.எப்போது அடுத்தது என்ற நிலையினை உருவாக்கி விட்டீர்கள்
நல்வாழ்த்துக்கள்
தோழமையுடன்.
Nice article bro, awiting for more articles. With pictures as u said. Thanks mohamed ibrahim
பதிலளிநீக்குஅருமையான அனுபவம் நிறைந்த வரிகள் கொண்டு அழகாக படைத்திருக்கின்றார் தோழர் பெரு முருகன் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குஜெ. சரவணன் த.மு.எ.க.ச. உறுப்பினர்
பதிலளிநீக்குஅருமையான அனுபவம் நிறைந்த வரிகள் கொண்டு அழகாக படைத்திருக்கின்றார் தோழர் பெரு முருகன் மனமார்ந்த வாழ்த்துகள்
ஆரம்பமே அசத்தல்
பதிலளிநீக்கு